காட்டுயானை தாக்கியதில் தோட்ட காவலாளி படுகாயம் விவசாயிகள் அச்சம்

தேவாரம் பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் காவலாளி படுகாயம் அடைந்தார். இதனால் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2018-06-21 22:16 GMT
தேவாரம்,

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வனச்சரக பகுதியையொட்டிய தேவாரம், பண்ணைப்புரம் ஆகிய இடங்களில் மக்னா வகையை சேர்ந்த ஒரு காட்டுயானை கடந்த 4 ஆண்டுகளாக அட்டகாசம் செய்து வருகிறது. இது, யானை இனங்களில் அரிய இனமாகும். மக்னா என்பது ஆணும், பெண்ணும் இல்லாத பாலினம் ஆகும். இந்த யானை அந்த பகுதியில் தென்னை, மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை உள்ளிட்ட விவசாய பயிர் களை சேதப்படுத்தி வந்தது. குறிப்பாக தேவாரம் சாக்குலூத்து, பெரும்புவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விளைபொருட்களை சேதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த காட்டுயானை தாக்கியதில் தேவாரம் பெரும்புவெட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காவல் பணியில் இருந்த சேகர் என்பவர் பரிதாபமாக இறந்தார்.

இதைத்தொடர்ந்து பெரும்புவெட்டி பகுதியில் உள்ள மாரியப்பன் என்பவருடைய தென்னந்தோப்புக்குள் யானை புகுந்தது. அங்கு தோப்பில் இருந்த கட்டிடத்தின் அறைக்கதவை உடைத்து, சமையல் செய்வதற்கு வைத்திருந்த அரிசி, உப்பு உள்ளிட்ட பொருட்களை தின்று விட்டு சென்றது.

இந்த நிலையில் பண்ணைப்புரம் பேரூராட்சி வெள்ளப்பாறை அடிவார பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலித்தொழிலாளர்கள் குடிசை அமைத்து தங்கி பணி செய்து வருகின்றனர். தோட்டத்தில் தே.மீனாட்சிபுரத்தை சேர்ந்த பெரியகுருசாமி (வயது 60) என்பவர் காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பெரியகுருசாமி உள்பட தொழிலாளர்கள் தோட்டத்தில் குடிசையின் முன்பகுதியில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் அந்த தோட்டத்துக்குள் காட்டு யானை புகுந்தது. சத்தம் கேட்டு எழுந்த தொழிலாளர்கள் அங்கு இருந்து ஓடினர். அப்போது பெரியகுருசாமியை அந்த யானை தாக்கியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் குடிசையில் சமைத்து வைத்திருந்த உணவுகளை தின்று, பொருட் களை உடைத்து நாசப்படுத்தி விட்டு வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றது.

படுகாயம் அடைந்த பெரியகுருசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த உத்தமபாளையம் வனஅலுவலர் ஜீவனா மற்றும் வனக்காப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் மீண்டும் யானை அட்டகாசம் செய்து வருவதால் தோட்டங்களுக்கு செல்ல விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்

மேலும் செய்திகள்