காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜனதாவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது சிவசேனா கடும் தாக்கு

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜனதாவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனா கடுமையாக தாக்கியுள்ளது.

Update: 2018-06-21 22:30 GMT
மும்பை, 

காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜனதாவை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என சிவசேனா கடுமையாக தாக்கியுள்ளது.

கவர்னர் ஆட்சி

காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜனதா-மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இரு கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்து ஆட்சி கலைந்தது. இதையடுத்து அங்கு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறியிருப்பதாவது:-

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அராஜக சூழலை ஏற்படுத்திவிட்டு பா.ஜனதா ஆட்சியில் இருந்து வெளியேறி உள்ளது. காஷ்மீர் பிரச்சினை என்றைக்கும் இந்த அளவுக்கு மோசமானதே இல்லை. இவ்வளவு ரத்த வெள்ளம் ஓடியதும் கிடையாது. ராணுவ வீரர்கள் இந்த எண்ணிக்கையில் பலியானதும் இல்லை.

காஷ்மீரில் அமைந்த அரசு பேராசையினால் உருவான ஒன்றாகும். பா.ஜனதாவின் இந்த பேராசையினால் காஷ்மீர் மக்கள், ராணுவ வீரர்கள் மிகப்பெரிய விலை கொடுக்க நேர்ந்தது. இதற்காக வரலாறு ஒருபோதும் பா.ஜனதாவை மன்னிக்காது.

370-வது சட்டப்பிரிவு

பிரதமர் மோடி சர்வதேச சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வருகையில் ஐ.நா. சபை காஷ்மீர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்கிறது. ராணுவ மந்திரியோ காஷ்மீரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவிக்கிறார். நாட்டை ஆட்சி செலுத்துவது ஒன்றும் குழந்தைத்தனமான விளையாட்டு கிடையாது. அரசியலமைப்பு சட்டம் 370-வது பிரிவை நீக்குவது, காஷ்மீர் இந்துக்களை மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது?.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பயங்கரவாத தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன. பாகிஸ்தான் அத்துமீறல்களும் அதிகரித்துள்ளன. போர் இல்லாத போதிலும் ராணுவ வீரர்கள் அதிகளவில் உயிரிழந்து வருகிறார்கள். இதையெல்லாம் பா.ஜனதா தடுக்க தவறியதும், பழியை மக்கள் ஜனநாயக கட்சி மீது சுமத்துகிறது. இதேபோலதான் ஆங்கிலேயர்களும் காஷ்மீர் விவகாரத்தை கைவிட்டு சென்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்