நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் பரமேஸ்வர் நம்பிக்கை
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்றும் பரமேஸ்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்றும் பரமேஸ்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்–மந்திரியுமான பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ராகுல் காந்தி பிரதமர் ஆவார்நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று நாங்கள் ஏற்கனவே அறிவித்து உள்ளோம். அரசியல் ரீதியாகவும், உள்ளூர் ரீதியாகவும் நாங்கள் இதுபற்றி ஆலோசித்து வருகிறோம். கர்நாடகத்தில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற ஆய்வு அறிக்கையும் எங்களிடம் உள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் என்னவாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். ராகுல் காந்தி பிரதமர் ஆவார். மந்திரி டி.கே.சிவக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் கேட்பது சரியல்ல. சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.
வருமான வரி சோதனைடி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரி சோதனை உள்நோக்கத்துடன் மத்திய அரசு நடத்தியது. இதை சட்ட ரீதியாக டி.கே.சிவக்குமார் எதிர்கொள்வார். அவருடைய வீடுகளில் வருமான வரி சோதனை நடத்துவது, நோட்டீஸ் அனுப்புவது போன்றவை புதிது அல்ல. விசாரணை அமைப்புகள் சட்டப்படி செயல்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் உள்நோக்கத்துடன் செயல்படுவதை நாங்கள் ஏற்க மாட்டோம். டி.கே.சிவக்குமார் பக்கம் காங்கிரஸ் கட்சி நிற்கிறது.
இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.