கடலூர், சிதம்பரத்தில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கடலூர், சிதம்பரத்தில் அந்த்யோதயா ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-06-21 23:15 GMT
கடலூர்,

தாம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக நெல்லைக்கு இயக்கப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர் முதுநகர், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் சிதம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை.

கடலூர் மாவட்டத்தை திட்டமிட்டு வேண்டும் என்றே புறக்கணிக்கும் வகையில் அந்த்யோதயா ரெயில் இயக்கப்படுவதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், சிதம்பரம் ரெயில் நிலையங்களில் அந்த்யோதயா ரெயில் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் நகரக்குழு நிர்வாகி கே.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், சுப்புராயன், மாநிலக்குழு மாதவன், நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன், ஆளவந்தார், தட்சிணாமூர்த்தி, தமிழரசன் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

ஒரு மாதத்துக்குள் அந்த்யோதயா ரெயில் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்லவில்லையெனில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், ஏற்கனவே கடலூர் வழியாக ஓடிக்கொண்டு இருந்த செங்கோட்டை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் சிப்காட் செயலாளர் சிவானந்தம், மாவட்டக்குழு, ஒன்றியக்குழு மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்