காட்டுமன்னார்கோவிலில் 3 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோட பெண்கள் திரண்டதால் பரபரப்பு: ஒரு மாதத்தில் மூடப்படும் என்று தாசில்தார் உறுதி
காட்டுமன்னார்கோவிலில் 3 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடுவதற்காக பெண்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார், ஒரு மாதத்தில் 3 கடைகளும் மூடப்படும் என்று உறுதி அளித்தார்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவிலில் இருந்து ராஜேந்திர சோழகன் செல்லும் சாலையில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த சாலை வழியாக முட்டம், எட்டியூர், மணல்மேடு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்லலாம். அதுமட்டுமின்றி அதிகளவு குடியிருப்புகளும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. மாலையில் 3 டாஸ்மாக் கடைகளிலும் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும். அவர்கள் அங்கு மதுகுடித்துவிட்டு சாலையில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும், அந்தவழியாக செல்பவர்களிடம் வீண் தகராறு செய்வதும் வாடிக்கையாகி விட்டது. அதுமட்டுமின்றி மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அந்த சாலையில் நடந்து செல்லும் மாணவிகளை, குடிபிரியர்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். எனவே இந்த சாலையில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளையும் மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் 3 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி அந்த கடைகளை பூட்டி பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காட்டுமன்னார்கோவில் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி 21-ந் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோடும் போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.
அதன்படி பூட்டுபோடும் போராட்டம் நடத்துவதற்காக நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மற்றும் பெண்கள் திரண்டு வந்தனர். முன்எச்சரிக்கையாக டாஸ்மாக் கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதித்ததால் டாஸ்மாக் கடை அருகில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சுகந்தி, மாநிலக்குழு மேரி, மாவட்ட துணை தலைவர் சிவகாமி, துணை செயலாளர் மல்லிகா, வட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, சுசிகலா, ரேணுகா, பிச்சம்மாள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி கோஷமிட்டனர்.
இது பற்றி அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவகாமசுந்தரி விரைந்து வந்து, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ஒரு மாதத்தில் 3 கடைகளும் மூடப்படும். இந்த கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்றார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.