மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை

மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2018-06-21 22:15 GMT

பெங்களூரு, 

மடாதிபதி சிவக்குமார சுவாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நலக்குறைவு

துமகூருவில் சித்தகங்கா மடம் உள்ளது. அந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவக்குமார சுவாமி. 111 வயதாகும் அவரை கர்நாடக மக்கள் ‘நடமாடும் கடவுள்‘ என்றே அழைக்கிறார்கள். அவருக்கு சமீபகாலமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் ‘ஸ்டெண்ட்‘ என்ற கருவி பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் சிவக்குமார சுவாமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர் ரவீந்திரா தலைமையிலான மருத்துவர்கள் குழு மடாதிபதிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அவருக்கு பொருத்தப்பட்டுள்ள ‘ஸ்டெண்ட்‘ கருவியில் ஏற்பட்டு இருந்த அடைப்புகளை டாக்டர்கள் நீக்கினர்.

தனி வார்டுக்கு மாற்றினர்

அதைத்தொடர்ந்து சிவக்குமார சுவாமி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றினர். ஆயினும் அவருடைய உடல்நிலை குறித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதுகுறித்து டாக்டர் ரவீந்திரா கூறுகையில், “சிவக்குமார சுவாமிக்கு பொருத்தப்பட்டுள்ள ஸ்டெண்ட் கருவில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது அதை சரிசெய்துள்ளோம். அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளது. அதற்கும் சிகிச்சை அளித்துள்ளோம். நிலைமை பயப்படும் அளவுக்கு இல்லை. அவர் நலமாக உள்ளார்“ என்றனர்.

மேலும் செய்திகள்