ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது கர்நாடக விவசாய பாசனத்திற்கு காவிரி நீரை திறக்க குமாரசாமி உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என கூறிய குமாரசாமி, கர்நாடக விவசாய பாசனத்திற்காக காவிரி நீரை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2018-06-21 22:30 GMT

பெங்களூரு, 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது என கூறிய குமாரசாமி, கர்நாடக விவசாய பாசனத்திற்காக காவிரி நீரை திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் சட்டரீதியாக பிரச்சினை வந்தால் எதிர்கொள்ள தயார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழ்நாட்டிற்கான நீரின் அளவு 177.25 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) ஆக குறைக்கப்பட்டது.

மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அதுபற்றி அரசிதழில் வெளியிட்டு உள்ளது. இதற்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களின் பிரதிநிதிகளை நியமித்துள்ளன. கர்நாடகம் மட்டும் அதன் உறுப்பினர்களை இன்னும் நியமிக்கவில்லை. சமீபத்தில் டெல்லி சென்று இருந்த முதல்–மந்திரி குமாரசாமி, மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக பேசினார்.

உறுப்பினர்களை நியமிக்கவில்லை

அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள வி‌ஷயத்தில் சில ‌ஷரத்துகளை ஏற்க முடியாது என்று குமாரசாமி கூறினார். அதாவது, 10 நாட்களுக்கு ஒரு முறை காவிரி மேலாண்மை ஆணையம் அணைகளை ஆய்வு செய்து, தண்ணீர் திறக்கும்படி மாநில அரசுக்கு உத்தரவிடும் என கூறியுள்ளது. இது கர்நாடகத்திற்கு எதிரானது. அதேப்போல் காவிரி ஆணைய விதிமுறைகளில் கர்நாடகத்திற்கு பாதகமான, விஞ்ஞானத்திற்கு மாறான அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. எனவே இவற்றை நீக்க வேண்டும் என்று குமாரசாமி கூறினார்.மேலும் இதற்கு அவசியம் தீர்வு காண வேண்டும் என்று கூறிய அவர், தாங்கள்(நிதின்கட்காரி) கேட்டுக் கொண்டுள்ளதால் காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்களை நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

ஆயினும் இதுவரை கர்நாடகம் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஆகி வருகிறது.

குமாரசாமி பேட்டி

இந்த நிலையில் முதல்–மந்திரி குமாரசாமி நேற்று ராமநகர் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்து விட்டுள்ளோம். அதே நேரத்தில் கர்நாடக விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டியது எனது கடமை. மண்டியா மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் விளை பயிர்கள் கருகி வருகின்றன. இந்த வி‌ஷயம் எனக்கு ஊடகங்கள் மூலம் தெரியவந்தது.

காத்திருக்க முடியாது

அதனால் கர்நாடக விவசாயிகளுக்கு தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்காக காத்திருக்க முடியாது. சட்டரீதியாக பிரச்சினை வந்தால் அதை நான் எதிர்கொள்கிறேன், கர்நாடக விவசாய பாசனத்திற்காக ஏரிகள் மற்றும் கால்வாய்களில் உடனடியாக அணையில் இருந்து காவிரி தண்ணீரை திறந்துவிடுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கர்நாடக விவசாயிகளின் நலன் தான் எனக்கு முக்கியம். ராமநகர் மாவட்டத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரிகள் பணி இடங்களை உடனே நிரப்புவேன். நான் முதல்–மந்திரியாக பதவி ஏற்று 25 நாட்கள் தான் ஆகிறது. ராமநகரில் மட்டும் பிரச்சினைகள் இல்லை. மாநிலம் முழுவதும் பிரச்சினைகள் இருக்கின்றன. எனது கவனம் இப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் உள்ளது.

சட்டரீதியான வாய்ப்புகள்

மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரி குறித்த வழக்கில் சம்மன் வந்துள்ளது. இதை அவர் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அவர் ராஜினாமா செய்வது குறித்து இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. நேரம் வரும்போது இதுபற்றி கூறுவேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்