ஜாமீனில் வெளியே வந்து பெண் என்ஜினீயரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டில் கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து பெண் என்ஜினீயரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-06-21 21:37 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் விஜயராகவன் தெருவைச் சேர்ந்தவர் அருண். இவருடைய மனைவி தீபிகா (வயது 27). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

தீபிகா, நேற்று முன்தினம் மாலை சென்னை புளியந்தோப்பில் உள்ள தனது பெற்றோரை பார்க்க வந்தார். புளியந்தோப்பு ஸ்டிபன்சன் சாலை - அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தீபிகாவிடம் கத்தியை காட்டி நகை, பணம் கேட்டு மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தீபிகா அலறினார். உடனே அவர்கள், தீபிகாவிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதற்கிடையில் தீபிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். இதனால் அவர்கள் செல்போனை கீழே போட்டு விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

வாலிபர் கைது

இது குறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மர்மநபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து சோழவரம் மாரம்பேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நவீன் (21) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர், தனது கூட்டாளியான வியாசர்பாடியை சேர்ந்த லிங்கேஸ்வரனுடன் சேர்ந்து பெண் என்ஜினீயர் தீபிகாவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.

ஜாமீனில் வெளியே வந்தனர்

மேலும் இவர்கள் இருவரையும் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக எம்.கே.பி.நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த 2 பேரும் மீண்டும் பெண் என்ஜினீயரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கைதான நவீனிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி லிங்கேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்