கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுவை பாட்டிலால் குத்திய வாலிபர் கைது

கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டுவை பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-06-21 21:34 GMT
அம்பத்தூர், 

சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர், கொளத்தூர் பகுதியில் உள்ள பீட்சா விற்பனை கடையில் வீடுகளுக்கு சென்று பீட்சா வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பாடி மேம்பாலம் அருகில் வந்தபோது அங்கு கொரட்டூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த மணிகண்டனையும் போலீசார் சோதனை செய்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததால், விசாரணைக்காக அவரை கொரட்டூர் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர்.

ஏட்டுவை பாட்டிலால் குத்தினார்

குடிபோதையில் இருந்த மணிகண்டன், போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி இருந்தார். இதனால் அவரை வீட்டுக்கு செல்லும்படி கூறிய போலீசார், காலையில் வந்து அபராதம் கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொள்ளும்படி போலீஸ் நிலையத்தை விட்டு அவரை வெளியே அனுப்பினர்.

ஆனால் அப்போதும் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மணிகண்டன், திடீரென போலீஸ் நிலையத்தின் வெளியே உடைந்து கிடந்த பாட்டிலால் ஏட்டு சித்துராஜ்(45) என்பவரின் முகத்தில் குத்தினார். இதில் ஏட்டு சித்துராஜ்க்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

கைது

இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தாக்குதலுக்கு உள்ளான போலீஸ் ஏட்டு சித்துராஜ்க்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது உதட்டில் 4 தையல்கள் போடப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

மேலும் செய்திகள்