பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது

பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கும் வரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-06-21 22:45 GMT
கிருஷ்ணகிரி,

சத்தீஸ்கார் மாநிலம் ராய்கரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வரையில் உயர்மின் கோபுரம் அமைத்து மின் கம்பிகள் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு வழியாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க சில இடங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

தேவீரஅள்ளி, குடிமேனஅள்ளி, தாமோதரஅள்ளி பகுதி விவசாயிகள் பலரும் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கவும், அளவீடு செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவங்களும் நடந்தன. மேலும் அதிகாரிகளும் அங்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்கள். கலெக்டர் அலுவலகத்திலும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு தலைமையில் விவசாயிகள் கலெக்டர் கதிரவனை நேற்று சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை விவசாயிகள் எதிர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் அமைச்சர், விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொடர்ந்து 27-ந் தேதி அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்மின் கோபுரங்களை அமைக்கும் பணி தொடர்ந்து வருகிறது.

தொடர்ந்து இரவு பகலாக காவல் துறையினர் விவசாயிகளையும், விவசாய சங்க அமைப்பினரையும் மிரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே 27-ந் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டும் வரையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும். விவசாயிகளை காவல் துறையினரை வைத்து மிரட்டுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அப்போது பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி, விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட துணை தலைவர் எஸ்.பி.சின்னசாமி, பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ராமசாமி, விவசாயிகள் சற்குணம், தங்கவேல் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்