பாப்பிரெட்டிப்பட்டி அருகே 15 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 8 வழி பசுமை சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 15 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-21 23:00 GMT
பொம்மிடி,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழி பசுமை சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்காக நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறுகிறது. தர்மபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்தில் இந்த பணி நடைபெற்று வந்தது. வருவாய்த்துறையினர், நில அளவையாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரூர் தாலுகா, வேடகட்டமடுவில் தொடங்கிய, நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று 10-வது நாளாக, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, இருளப்பட்டி பகுதியில் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்ய வந்தனர். அப்போது சந்திரகுமார் என்பவரது விவசாய நிலத்தில் அளவீடு செய்வதற்கு போலீசாருடன் வருவாய்த்துறையினர் சென்றனர்.

இதையறிந்த சந்திரகுமார் தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, குடும்பத்தினருடன் தனக்கு சொந்தமான நிலத்தில் அளவீடு செய்தால், ‘தீக்குளிப்பேன்’ என எச்சரிக்கை விடுத்தார். இதேபோல், அதே பகுதியை சேர்ந்த மனோகரன், வேலவன் உள்ளிட்ட 14 பேர் கைகளில் மண்எண்ணெய், பெட்ரோல் கேன்களுடன் நின்று தங்கள் நிலத்தை அளவீடு செய்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் அருகில் இருந்த விவசாய நிலங்களில் அளவீடு பணிகளை தொடர்ந்து நடத்தினர். நேற்று அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலங்கள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கிராமமக்கள் பசுமை வழி சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் ஆங்காங்கே கருப்பு கொடி கட்டி வைத்துள்ளனர்.

8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 15 பேர் உடல்களில் மண்எண்ணெய், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்