திருவள்ளூர் அருகே லாரி-வேன் மோதல்; 10 பேர் காயம்

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சாலையில் நடந்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-06-21 21:15 GMT
திருவள்ளூர், 

மராட்டிய மாநிலம் ஜல்கா மாவட்டம் பத்தாலி கிராமத்தை சேர்ந்தவர் அனில்கோடா நர்கடே (வயது 50). இவரது உறவினர்கள் ஹீரான் போடா காலே (55), வினய்க் ரத்தன்(41), ஜெகதீஷ்சவுத்ரி(34), சாருலதா(45), லட்சுமணபிரிதி(31), தினேஷ்படேல்(20), பவுன்படேல்(19), சுரேஷ்படேல்(22), இவர்கள் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு செல்வதற்காக ஒரு வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ஜெகதீஷ் (25) என்பவர் ஓட்டினார்.

வேன் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் அந்த வேனில் பயணம் செய்த டிரைவர் உள்பட 10 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்