குமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி

குமரி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.;

Update: 2018-06-21 22:30 GMT
நாகர்கோவில்,

சர்வதேச யோகா தினம் நேற்று உலக நாடுகள் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிகளைப் பொறுத்தமட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளும் நேற்று காலையில் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1¼ லட்சம் மாணவ-மாணவிகள் இந்த யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த யோகா நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி பாலா தொடங்கி வைத்தார். இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என அனைத்திலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியிலும் பல்லாயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி தேர்வுக்கூடத்தில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் ராதாகிருஷ்ணன் (பொறுப்பு) தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் லியோடேவிட், ஓய்வு பெற்ற டீன் சோமசேகர், டாக்டர்கள் ஆறுமுகவேலன், பீனா, கிங்ஸ்லி, கரோலின் கீதா, பிரவின், பிரின்ஸ் பயஸ் மற்றும் டோமினிக் உள்பட டாக்டர்கள், மருத்துவ பேராசிரியர்கள், பயிற்சி டாக்டர்கள், நர்சுகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாம் வளாகத்தில் நேற்று காலை 6.30 மணி முதல் 8 மணி வரை யோகா தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் தம்பிராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண், சுரேஷ், சில்வான்ஸ் மற்றும் ஆயுதப்படை போலீசாரும், பயிற்சி போலீசாரும் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியிலும் யோகாதின நிகழ்ச்சி நடந்தது. மேலும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களிலும் யோகா தின நிகழ்ச்சிகள் நடந்தன. 

மேலும் செய்திகள்