கடற்படை வீரர்களுக்கு மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா பெரிதும் உதவுகிறது

கடற்படை வீரர்களுக்கு மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா பெரிதும் உதவுகிறது என்று கப்பல் படை அதிகாரி ராஜீவ் சவுத்திரி கூறினார்.

Update: 2018-06-21 22:45 GMT
கோவை,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி உயர ஆதியோகி சிலை முன்பு யோகா தின நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இதில் ஐ.என்.எஸ். அக்ரனி காமண்டிங் அதிகாரி கமோடர் ராஜீவ் சவுத்திரி, அதிவிரைவு படை துணை கமாண்டர் சுந்தரகுமார், கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சி.ஏ.வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் அதிவிரைவு படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். யோகா பயிற்சிக்கு பிறகு ஐ.என்.எஸ். அக்ரனி கமாண்டிங் அதிகாரி ராஜீவ் சவுத்திரி நிருபர்களிடம் கூறியதாவது.

“இந்திய கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை பிரிந்து நீண்ட நாட்கள் கடலுக்குள் கப்பலில் பணியாற்றுகின்றனர். குடும்பத்தை பிரிந்து கடலுக்குள் தனியாக இருப்பது, கடல் பயணத்தில் ஏற்படும் உடல் நல கோளாறுகள் போன்ற பிரச்சினைகளால் வீரர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுகிறது. அந்த மன அழுத்தத்தை கட்டுப்படுத்த யோகா பெரிதும் உதவியாக உள்ளது. அதனால், கடற்படை வீரர்களுக்கான பயிற்சி பாட திட்டத்தில் யோகாவை சேர்த்துள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.

எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டர் கமலேஷ்குமார் கூறுகையில், ‘பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் பல்வேறு காரணங்களால் மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். அதில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு யோகா உறுதுணையாக உள்ளது’ என்றார். கோவையில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சிறை சாலைகளிலும் ஈஷா சார்பில் இலவச யோகா வகுப்புகள் நேற்று நடத்தப்பட்டன.

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசிய மாணவர் படையினர் (என்.சி.சி.) யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சி.வி.தீபா தலைமை தாங்கி, யோகா பயிற்சி மேற்கொண்டார். தேசிய மாணவர் படை அதிகாரி ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் யுவா பவுண்டேசன் சார்பில், யோகா பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு யோகா செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.ரமேஷ் வரவேற்றார். யுவா பவுண்டேசன் நிறுவனர் சிவனேசன் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விளக்கினார். இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முடிவில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பி.மூர்த்தி நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்