தனியார் தொழிற்சாலையில் இருந்து 10 டன் தரமற்ற தேயிலைத்தூள் பறிமுதல்

கூடலூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து 10 டன் தரமற்ற தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-06-21 22:15 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தரமற்ற முறையில் தேயிலைத்தூள் தயாரிக்கபடுவதாகதேயிலை வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொழிற்சாலை ஆலோசகர் சுனில்குமார், வளர்ச்சி அதிகாரி அஞ்சலி மற்றும் பணியாளர்கள் கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தேயிலைத்தூள் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த பசுந்தேயிலை தரமற்ற முறையில் இருந்ததையும், தேயிலைத்தூள் கழிவுகள் தொழிற்சாலைக்குள் வைக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தனர். மேலும் அதிகாரிகளின் ஆய்வில் அங்கு தரமற்ற தேயிலைத்தூள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டு இருந்த 10 டன் தேயிலைத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது.

இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தேயிலைத்தூளின் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப் பப்பட உள்ளது. அந்த முடிவின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தரமான தேயிலைத்தூள் தயாரிக்க தேயிலை வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தர மற்ற தேயிலைத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மீது கலப்பட தேயிலைத்தூள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் அதை பயன்படுத்தும் தேநீர் கடைகளில் ஆய்வு நடத்தி கலப்படம் உறுதி செய்யப்பட்டால் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொழிற்சாலை உரிமம் மற்றும் வியாபார உரிமங்கள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குன்னூரில் இருந்து சேலாஸ் செல்லும் சாலையில் கரும்பாலம் பகுதியில் தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு தேயிலை தூள் தயாரித்து கொண்டு இருந்தனர். அப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அந்த பகுதிமக்கள் தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனே தேயிலை வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அந்த தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு அரைப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த பசுந்தேயிலையில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதை பார்த்த போது பசுந்தேயிலை அழுகி இருப்பதும், அதன் மூலம் தேயிலை தூள் தயாரிக்க முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்த 8 ஆயிரம் கிலோ அழுகிய தேயிலையை கைப்பற்றி அதிகாரிகள் அழித்தனர்.

மேலும் செய்திகள்