மும்பை விமான நிலையத்தில் முன்னாள் எம்.எல்.சி.யிடம் ரூ.40 லட்சம் பறிமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மும்பை விமான நிலையத்தில் முன்னாள் எம்.எல்.சி. கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-06-20 22:30 GMT
மும்பை,

மும்பை விமான நிலையத்தில் முன்னாள் எம்.எல்.சி. கொண்டு வந்த ரூ.40 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

முன்னாள் எம்.எல்.சி.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் சந்தீப் பஜோரியா. சம்பவத்தன்று இவர் நாக்பூரில் இருந்து மும்பைக்கு வந்தார். நாக்பூர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது உடைமைகளை ஸ்கேன் செய்தபோது, அதிகளவில் பணம் இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் அந்த பணத்துடன் அவர் மும்பை செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், நாக்பூர் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர் சந்தீப் பஜோரியா அதிக பணத்துடன் வருவது பற்றி மும்பை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ரூ.40 லட்சம் பறிமுதல்

இதைத்தொடர்ந்து அவர் மும்பை வந்து இறங்கியதும், அங்கு தயாராக இருந்த வருமான வரித்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கொண்டு வந்த பணம் தொடர்பாக சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் விமானத்தில் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதில், ரூ.40 லட்சம் இருப்பது தெரியவந்தது.

இருப்பினும் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து வருமான வரித்துறையினர் அவரை அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், மும்பை ஒர்லியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வீடு வாங்குவதற்கு பதிவு செய்ய அந்த பணத்தை கொண்டு வந்ததாக சந்தீப் பஜோரியா தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்