சாதிசான்றிதழ் கேட்டு குடுகுடுப்பை அடித்தபடி கணிக்கர் சமுதாயத்தினர் கலெக்டரிடம் மனு

சாதிசான்றிதழ் கேட்டு குடுகுடுப்பையை அடித்தபடி கணிக்கர் சமுதாயத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-06-20 22:30 GMT

கடலூர்,

பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் குணா தலைமையில், மாநில இளைஞர் அணி செயலாளர் ரெங்கேஷ் முன்னிலையில் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தில் வசித்துவரும் கணிக்கர் சமுதாயத்தினர் நேற்று குடும்பத்துடன் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு பாதையில் இருந்து குடுகுடுப்பையை அடித்தபடி சென்று கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–

நாங்கள் தனித்து குறிசொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவோம். பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தில் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பெரியவர்கள் நாங்கள் எப்படியோ கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறோம். பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம்.

பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் அவர்கள் மேல்படிப்புக்கு செல்லவும், அரசின் சலுகைகளை பெறவும் சாதி சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆனால் உரிய சான்றிதழ் இல்லாததால் இந்த ஆண்டு எங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது. சாதி சான்றிதழ் கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. ஆனால் காஞ்சீபுரம், கன்னியாகுமரி போன்ற இதர மாவட்டங்களில் வசிக்கும் எங்கள் சமுதாயத்தினருக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு சாதிசான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அதேபோல் பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமையில் பாதிரிக்குப்பம் நத்தவெளி சாலையில் வசித்து வரும் 75–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் கேட்டும், அதில் பிரதம மந்திரியின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தருமாறும், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்