காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்தாவிட்டால் மத்திய அரசை மக்கள் தண்டிப்பார்கள், வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்தாவிட்டால் மத்திய அரசை மக்கள் தண்டிப்பார்கள் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

Update: 2018-06-20 23:15 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில், காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்துக்கு கோவிந்தராசு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் குழ.சுந்தரராஜன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழகத்துக்கும், கர்நாடாகாவுக்கும் 1924-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தப்படி காவிரி நதி நீர் பங்கீடு 50 ஆண்டுகளாக சுமுகமாக நடந்து வந்தது. 1968-ம் ஆண்டு கர்நாடக அரசு ஹேமாவதி, கபினி அணைகளை கட்டியது. அப்போது தமிழகத்தில் அண்ணா தலைமையிலான ஆட்சி நடந்தது.

அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி அண்ணா இறந்த பிறகு கருணாநிதி தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக 26 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த கருணாநிதி, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதால் வழக்கை வாபஸ் பெற்றார். அம்மாவை(ஜெயலலிதா) போன்று தொலைநோக்கு பார்வை இல்லாத கருணாநிதியால் தான் நமக்கு இவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

காவிரி நீருக்காக அம்மா ஓவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர்அணையை திறக்கவில்லை என 84 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார். அப்போதைய பிரதமர் நரசிம்மராவ், இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும் என உறுதி அளித்த பிறகுதான் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு இதழிலில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா ஆவார். அப்போது தஞ்சையில் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் அம்மாவுக்கு ‘பொன்னியின் செல்வி’ என பாராட்டு விழா நடத்தினர். தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்தி டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கவில்லை என்றால் கர்நாடக அரசும், மத்திய அரசும் மக்களால் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் டாக்டர் வைகைச்செல்வன், பேச்சாளர் டி.ஏ.பாலகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ. திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்