கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை, அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2018-06-20 23:00 GMT

திருச்சி,

திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 63–வது கிளை வங்கி கே.கே.நகர் தென்றல் நகரிலும், 64–வது கிளை வங்கி தஞ்சை ரோட்டில் உள்ள ரெயில் நகரிலும் நேற்று திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு கிளை கூட்டுறவு வங்கிகளை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, பொதுமேலாளர் பிரபாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆட்சியில் இதுவரை 104 கூட்டுறவு வங்கி கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 மாவட்ட வங்கிகள் மற்றும் 848 கிளை வங்கிகள் உள்ளன. இந்த கூட்டுறவு வங்கிகளில் வரலாறு காணாத வகையில் ரூ.27,750 கோடியை பொதுமக்கள் டெபாசிட் செய்துள்ளனர்.

இதன் மூலம் வீட்டு வசதி கடன், வீட்டு அடமான கடன், நகைக்கடன், பயிர்க்கடன், வாகனக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு பொதுமக்கள், விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள். 2018–19–ம் ஆண்டில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.417 கோடி அளவில் 61,851 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு 30 சதவீதமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் மற்றும் கடலூர் ஆகிய 8 டெல்டா மாவட்டங்களில் மட்டும் கடந்த 7–ந் தேதிவரை ரூ.21 கோடியே 57 லட்சத்துக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் தவறு செய்பவர்களையும், முறைகேடு செய்பவர்களையும் கண்டிப்பதற்கு விஜிலென்ஸ் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அப்படி முறைகேடு செய்பவர்கள் அ.தி.மு.க.., தி.மு.க. என யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க. ஆட்சியில் நடந்ததுபோல அல்லாமல், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முறைகேடுகள் முற்றிலும் களையப்பட்டுள்ளன. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் யார் யாருக்கெல்லாம் கடன் உதவி வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறையும் கொண்டு வரப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 50 கூட்டுறவு வங்கிகளில் ஏ.டி.எம். வசதி செய்யப்பட்டுள்ளது.

சேலம்–சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ள 8 வழிச்சாலைக்கு எதிராக, சில சுயநலவாதிகள் போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள். அத்திட்டம் பற்றிய உண்மை நிலை மக்களுக்கும் தெரியும். முதல்–அமைச்சரின் விளக்கத்தை கேட்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினே ஆதரவு தெரிவித்து விட்டார். இந்த சாலை அமைவதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். எனவே, அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர் திருவெறும்பூர் அருகே வேங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் சுத்திகரிப்பு எந்திரத்தை இயக்கி அதை பார்வையிட்டார். இதன் மூலம் விவசாயிகள், திருச்சி காவிரி கூட்டுறவு விதைகள் பெற வழி வகுத்துள்ளது என்றும், கூட்டுறவு சேவையில் இதுஒரு மைல் கல் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், ரத்தினவேல் எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் 17 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டர். அதன் பின்னர், டெல்டா மாவட்டங்களில் நடப்பு குறுவை சாகுபடி தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கலந்தாய்வு நடந்தது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பரமேஸ்வரி முருகன், சந்திரசேகர், கலெக்டர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்