விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ‘கியாஸ்’ சிலிண்டருக்கு பாடை கட்டி ஆர்ப்பாட்டம்

விலை உயர்வை கண்டித்து திருச்சியில் ‘கியாஸ்’ சிலிண்டருக்கு பாடை கட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-06-20 22:15 GMT

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்யவேண்டும் என கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஒரு கியாஸ் சிலிண்டரை கொண்டு வந்திருந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அதற்கு மாலை அணிவித்து பாடை கட்டி தலைக்கு மேல் தூக்கி வைத்து இருந்தனர். பெண் தொண்டர்கள் சிலிண்டரை சுற்றி ஒப்பாரி வைத்து அழுதனர். கம்யூனிஸ்டு கட்சியினரின் இந்த நூதன போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ், பகுதி செயலாளர்கள் செல்வகுமார், சுந்தர்ராஜ், அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல் விலையை உடனே குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோ‌ஷங்களை ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்