காரையாறு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி நண்பர்கள் கண் எதிரே பரிதாபம்

காரையாறு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். அவருடைய நண்பர்கள் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-06-20 21:30 GMT

விக்கிரமசிங்கபுரம், 

காரையாறு தாமிரபரணி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலியானார். அவருடைய நண்பர்கள் கண் எதிரே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

என்ஜினீயரிங் மாணவர்

திருச்சி கைலாசபுரம் பி.எச்.இ.எல். டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது 20). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். ராமகிருஷ்ணன் விடுமுறைக்காக தற்போது சொந்த ஊருக்கு வந்து இருந்தார்.

இந்த நிலையில் ராமகிருஷ்ணன் தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த், எட்வின் ஆகியோருடன் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள மற்றொரு நண்பரான ஜோயல் ராபின் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு இருந்து 4 பேரும் நேற்று ஒரு காரில் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு குளிக்க சென்றனர். அருவியில் குளித்து விட்டு அங்கு இருந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் ராமகிருஷ்ணன் உள்பட 4 பேரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.

ஆற்றில் மூழ்கி பலி

ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த போது, திடீரென்று ராமகிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து உடனடியாக அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் இறங்கி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் ராமகிருஷ்ணனை பிணமாகவே மீட்க முடிந்தது. அவரது உடலை பார்த்து நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபம்

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்கள் கண் எதிரே ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்