கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘சஜக்’ ஆபரேஷன்

கன்னியாகுமரி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ‘சஜக்’ ஆபரேஷன் என்ற பெயரில் 11 சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.;

Update: 2018-06-20 23:15 GMT
கன்னியாகுமரி,

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அடிக்கடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுவலை தடுக்க ‘சஜக்‘ ஆபரேஷன் என்னும் பெயரில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை இந்த கண்காணிப்பு பணி நடைபெற்றது.

கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் 2 அதிநவீன படகுகளில் இந்த கண்காணிப்பு பணி நடைபெற்றது. ஒரு படகில் இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் நம்பியார் மற்றும் போலீசார் சின்ன முட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் வரையும், மற்றொரு படகில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி தலைமையில் போலீசார் சின்னமுட்டத்தில் இருந்து முட்டம் வரை கண்காணித்து வந்தனர். அப்போது, கடலில் சந்தேகப்படும் வகையில் படகுகள் நடமாட்டம் உள்ளதா? என்று கண்காணித்தனர்.

மேலும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடலோர மீனவ கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்