ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் தன்னார்வ அமைப்புகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரத்ததானம் செய்வதை இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2018-06-20 21:45 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் ரத்ததானம் செய்வதை இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்தார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்

எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் தினம், எச்.ஐ.வி. தடுப்பு மருந்து விழிப்புணர்வு தினம் மற்றும் உலக குருதி கொடையாளர் தினம் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில், 15 மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், 46 சிறந்த குருதி கொடையாளர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள், அரசு ரத்த வங்கிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்டி சான்றிதழ்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

தன்னார்வ அமைப்புகள்

இந்த நாள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உடல் உபாதையோடு பல்வேறு சமூக பொருளாதார மனோரீதியான சிக்கல்களில் தவிக்கும் மக்களின் துயர்நீக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தும் நாளாக அமைகிறது. எச்.ஐ.வி. தடுப்பு மருந்து விழிப்புணர்வு தினமானது இந்த மருந்தின் அவசியத்தையும், இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தியுள்ள அனைத்து தரப்பு மக்களையும் நினைவுபடுத்துவதற்காக நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்களும், தன்னார்வ அமைப்புகளும் ரத்ததான செயல்பாடுகளில் முனைப்புடன் பங்கேற்று வருகிறார்கள். மேலும் அவர்கள், இந்த சேவையில் தொடர்ந்து பங்கேற்கவும், மற்றவர்களையும் ஊக்குவித்து ரத்ததானம் செய்ய முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

12 ஆயிரத்து 500 யூனிட் ரத்தம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரத்தம் தட்டுப்பாடு இல்லாது போதியளவில் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் தமிழ் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அதன் அங்கமான தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்று சங்கமும் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு 9 ஆயிரத்து 200 யூனிட் ரத்தம் தன்னார்வமாக பெறப்பட்டது. இது வரும் ஆண்டில் 12 ஆயிரத்து 500 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, சுந்தரலிங்கம், மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் துறைத்தலைவர் ஜெயமுருகன், தூத்துக்குடி மாவட்ட ரத்த பரிமாற்ற அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்