மேலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம்
மேலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியை பூட்டி பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் பள்ளியில் கூடுதலாக ஆசிரியர் நியமிக்க கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
மேலூர்,
மேலூர் அருகே மட்டங்கிபட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் சேர்க்கை குறைந்தது. இதனால் கிராம மக்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்காமல் அரசு பள்ளியில் சேர்த்து மேம்படுத்த முடிவெடுத்தனர். அதன்படி சிறப்பாக செயல்பட்டு வந்தது இந்த பள்ளிகூடம். ஆனால் இந்த ஆண்டு 59 மாணவர்கள் மட்டுமே இப்பள்ளியில் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
பள்ளியில் 60–க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியில் கூடுதலாக ஆசிரியரை நியமிக்க கோரி நேற்று பள்ளியை திறக்கவிடாமல் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கிருந்த 59 மாணவர்களும் மரத்தடி நிழலில் பயிலும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மேலூர் வட்டார பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஜெசந்தா, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஜெசந்தா தெரிவித்தார். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.