வெள்ளித்திருப்பூர் அருகே சித்தார் ஓடையில் பட்டப்பகலில் மணல் கடத்தல்
வெள்ளித்திருப்பூர் அருகே சித்தார் ஓடையில் பட்டப்பகலில் மணல் கடத்துபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அம்மாபேட்டை,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியில் இருந்து ஓடையாக வருகிறது. இது சித்தார்ஓடை என்று அழைக்கப்படும் இந்த ஓடை மாத்தூர், வெள்ளித்திருப்பூர், பூனாச்சி வழியாக சித்தாரை வந்தடைந்து, பின்னர் காவிரி ஆற்றில் கலக்கிறது. மழை பெய்யும்போது ஓடை தண்ணீரில் மணலும் கலந்து வந்து ஆங்காங்கே மணல் மேடுகளாக காட்சியளிக்கும்.
இந்தநிலையில் பவானி–சென்னம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் வெள்ளித்திருப்பூரை அடுத்து ஆயமரத்தோட்டம் என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் சித்தார் ஓடையை கடக்க சுமார் 100 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் அடியில் பட்டப்பகலிலேயே சல்லடை கொண்டு மணல் சலிப்பதும், அந்த மணலை சிலர் டிராக்டரில் கடத்துவதுமாக உள்ளனர்.
இந்த காட்சியை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து, பட்டப்பகலிலேயே இப்படி மணல் கடத்துகின்றார்களே அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்களா? என தங்களுக்குள்ளாகவே புலம்புகிறார்கள்.
இப்படி மணல் கடத்துவதால் ஓடை முழுவதும் ஆங்காங்கு கிணறு போன்று காட்சியளிக்கிறது. இதேபோல் அருகே உள்ள வில்லமரத்துக்கொட்டாய் என்ற இடத்திலும் மணல் கடத்தும் பணி சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஓடையில் அள்ளப்படும் மணல் அங்கேயே ஒரு புறம் கொட்டி வைக்கப்படுகிறது. அதன்பின்னர் கூலிதொழிலாளர்களை கொண்டு மணலை சலித்து டிராக்டரில் வேண்டுபவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் கடத்துபவர்களை துரத்தி துரத்தி பிடிக்கும் அதிகாரிகள், பட்டப்பகலில் ஓடையில் மணல் கடத்துபவர்களையும் உடனே பிடிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.