கடம்பூர் மலைக்கிராமத்தில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 3 யானைகள்

கடம்பூர் மலைக்கிராமத்தில் 60 அடி ஆழ கிணற்றில் 3 யானைகள் தவறி விழுந்தன. பக்கவாட்டில் வழி ஏற்படுத்தியதால் யானைகள் தானாக மேலே ஏறி வந்துவிட்டன.

Update: 2018-06-20 22:00 GMT

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. நேற்று அதிகாலை 10–க்கும் மேற்பட்ட யானைகள் காட்டைவிட்டு வெளியேறி கடம்பூர் மலைக்கிராமம் கானகுந்தூர் என்ற இடத்துக்கு வந்தன.

அந்த பகுதியில் குருசாமி என்பவருடைய மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த மக்காச்சோள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தின.

இந்தநிலையில் யானைகள் கூட்டத்தில் வந்த ஒரு குட்டி உள்பட 3 பெண் யானைகள் தோட்டத்தில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் சறுக்கியபடி தவறி விழுந்து விட்டன. அது தெரியாமல் மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. யானைகள் விழுந்த கிணற்றில் தற்போது 10 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. தண்ணீரில் தத்தளித்தபடி யானைகள் இருந்தன.

இதற்கிடையே காலை 6 மணி அளவில் தோட்டத்துக்கு வந்த குருசாமிக்கு, கிணற்றில் 3 யானைகளும் தவறி விழுந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்த வனத்துறையினர் யானைகள் வெளியே வர பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டு பகுதியை இடித்து வழி ஏற்படுத்தினர். பக்கவாட்டு வழியாக முதலில் குட்டி யானை ஏறியது. அந்த யானையை பின்பக்கமாக 2 பெரிய யானைகளும் தலையால் முட்டித் தள்ளின.

அதனால் குட்டி யானை எளிதாக மேலே ஏறியது. அதன்பிறகு பெரிய யானை ஒன்று மேலே ஏற முயன்றது. அப்போது மண் சறுக்கியது. ஆனாலும் கிணற்றுக்குள் இருந்த 3–வது யானை தலையை முட்டி தள்ளியதும், 2–வது யானையும் ஏறியது.

வழித்தடத்தின் பாதி தூரம் ஏறிய யானை நின்றுகொள்ள, கிணற்றில் இருந்த 3–வது யானை தனக்கு முன் ஏறிய யானையின் வாலை துதிக்கையால் பற்றிக்கொண்டு லாவகமாக மேலே ஏறி வந்தது.

3 யானைகளும் பத்திரமாக மேலே வந்ததை வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கைகளை தட்டி உற்சாக குரல் எழுப்பினார்கள். அதன்பின்னர் குட்டி யானையை அழைத்துக்கொண்டு 2 பெரிய யானைகளும் தானாக காட்டுக்குள் சென்றுவிட்டன.

மேலும் செய்திகள்