போலி ஆவணங்கள் தயாரித்து ஓய்வு பெற்ற விஞ்ஞானியின் நிலத்தை விற்றவர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து கல்பாக்கம் அணுமின்நிலைய ஓய்வு பெற்ற விஞ்ஞானியின் நிலத்தை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பழனிசாமி. இவருக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள நிலம் புதுப்பட்டினத்தில் உள்ளது. இந்த நிலத்தை ஒருவர் போலி ஆவணங்கள் தயாரித்து மற்றொருவருக்கு விற்று விட்டதாக ஓய்வு பெற்ற விஞ்ஞானி பழனிசாமி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் செய்தார். அந்த புகார் மனு நில அபகரிப்பு போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம் மேற்பார்வையில், சப்–இன்ஸ்பெக்டர் தனராஜ் வழக்குப்பதிவு செய்து போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவரை வலைவீசி தேடி வந்தார்.
கைது
இந்த நிலையில், சுமார் ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்த கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த பசலூர் ரகுமான் (வயது 37) என்பவரை காஞ்சீபுரம் நில அபகரிப்பு போலீசார் நேற்று புதுப்பட்டினத்தில் அவர் நடத்தும் டீ கடையில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பசலூர்ரகுமானை செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் கோர்ட்டு உத்தரவின் பேரில் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.