ரூ.63 கோடி கட்டண பாக்கி: செம்பூரில் 3,250 மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் அறிவிப்பு
செம்பூரில் ரூ.63 கோடி கட்டண பாக்கி செலுத்தாத 3,250 மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
மும்பை,
செம்பூரில் ரூ.63 கோடி கட்டண பாக்கி செலுத்தாத 3,250 மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டண பாக்கி
மும்பை செம்பூர் சித்தார்த் காலனியில் ஏராளமான குடிசைவாசிகள் வசித்து வருகின்றனர். இங்கு ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் மின்வினியோகம் செய்து வருகிறது. இங்குள்ள 3 ஆயிரத்து 250 மின்நுகர்வோர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டணத்தை கட்டாமல் ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனத்துக்கு ரூ.63 கோடி பாக்கி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 3 ஆயிரத்து 250 மின் இணைப்புகளையும் துண்டிக்க ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
எதிர்ப்பு
இதற்கு அப்பகுதி முன்னாள் கவுன்சிலரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான ரவீந்திர பவார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நீங்கள் (ரிலையன்ஸ் எனர்ஜி) நினைத்தபடி மின் வினியோகத்தை துண்டித்து விடமுடியாது. இங்கு குடிசை சீரமைப்பு செய்யும் கட்டுமான நிறுவனம் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறியிருந்தது.
எனவே அவர்களிடம் தான் நீங்கள் மின் கட்டணத்தை கேட்கவேண்டும். இங்கு வசிப்பவர்கள் ஏழைகள். அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது’’, என்றார்.