லாரிகள் வேலைநிறுத்தம் எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்தது
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்து இருக்கிறது.
சென்னை,
தினசரி டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். 2–வது நாளாக நேற்று போராட்டம் நீடித்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் வரத்து குறைந்தது.
இதன் எதிரொலியாக காய்கறி விலை சற்று உயர்ந்து இருப்பதாகவும், வேலைநிறுத்தப்போராட்டம் தீவிரமானால் பாதிப்பு அதிகமாகி காய்கறி விலை மேலும் இரண்டு மடங்கு உயர வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் சங்க பொருளாளர் சுகுமார் கூறியதாவது:–
இரண்டு மடங்கு
அதிகரிக்கும்
லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து இருக்கிறார்கள். இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 320 முதல் 350 லாரிகளில் காய்கறிகள் வரத்து இருந்த நிலை, இப்போது 280 முதல் 290 லாரிகளாக குறைந்து, விலையும் சற்று உயர்ந்து இருக்கிறது.
குறிப்பாக தக்காளி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, அவரைக்காய் போன்றவற்றின் விலை அதிகரித்து இருக்கிறது. தற்போது லாரிகள் ஓரளவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் போராட்டம் தீவிரம் அடையும் பட்சத்தில் லாரிகள் வரத்து வெகுவாக குறைந்தால், காய்கறிகள் விலையும் இரண்டு மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பு அதிகளவில் உள்ளது.
லாரிகள் வேலைநிறுத்தத்தால் கடந்த வாரத்தை விட, காய்கறிகள் விலை 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது.
விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று (நேற்று) விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம்(ஒரு கிலோ) வருமாறு:– (அடைப்புக்குறிக்குள் கடந்த வார விலை குறிப்பிடப்பட்டு உள்ளது)
தக்காளி – ரூ.22 முதல் ரூ.25 வரை(ரூ.15 முதல் ரூ.17 வரை), பீன்ஸ் – ரூ.80(ரூ.60), அவரைக்காய் – ரூ.55(ரூ.45), கத்தரிக்காய் – ரூ.30 முதல் ரூ.40 வரை(ரூ.25), வெண்டைக்காய் – ரூ.30(ரூ.25), கேரட் – ரூ.35 (ரூ.30), சவ்சவ் – ரூ.20(ரூ.15), பீட்ரூட் – ரூ.20(ரூ.10 முதல் ரூ.15 வரை), நூக்கல் – ரூ.40 (ரூ.20), முட்டைக்கோஸ் – ரூ.20(ரூ.10), சாம்பார் வெங்காயம் – ரூ.30(ரூ.25), பல்லாரி – ரூ.25(ரூ.20), உருளைக்கிழங்கு – ரூ.30(ரூ.25), முருங்கைக்காய் – ரூ.30(ரூ.20), சேனைக்கிழங்கு – ரூ.30(ரூ.25), சேப்பக்கிழங்கு – ரூ.35(ரூ.30), கொத்தவரங் காய் – ரூ.20(ரூ.15), முள்ளங்கி – ரூ.30(ரூ.20), கோவைக்காய் – ரூ.25(ரூ.20), பீர்க்கங்காய் – ரூ.30(ரூ.30), புடலங்காய் – ரூ.15(ரூ.10), மிளகாய் – ரூ.40 (ரூ.30), இஞ்சி – ரூ.80 (ரூ.70), தேங்காய் – ரூ.20 முதல் ரூ.30 வரை.
இவ்வாறு அவர் கூறினார்.