கடலூரில் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம்

சுருக்குவலையை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கடலூரில் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

Update: 2018-06-19 23:00 GMT
கடலூர், 

கடலூரில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் மீனவ கிராம மக்களிடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். எனவே சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதற்கிடையில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடைகாலம் கடந்த 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் மட்டும் கடலுக்கு செல்லவில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சொத்திக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்தை 2 முறை சந்தித்து பேசினார்கள். அப்போது சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டி இருப்பதால் 2 நாட்கள் பொறுத்திருக்கும்படி அமைச்சர் சம்பத் கூறினார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கிராமத்தில் மீனவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை செய்தனர். பின்னர் சுருக்கு வலையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி படகுகளில் கருப்பு கொடி ஏற்றி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கிராமத்தில் 4 முனை சந்திப்பில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து உப்பனாற்று பாலம் நோக்கி ஊர்வலமாக நடந்து வந்தனர். அங்கு பாலத்தின் இருபக்கமும் உப்பனாற்றில் நிறுத்தி வைத்திருந்த படகுகளில் கருப்புகொடி ஏற்றினர்.

மேலும் பாலத்தில் இருந்து கிராமத்துக்கு செல்லும் சாலையின் இருபக்கமும் கருப்புகொடி நட்டனர். கிராமத்துக்கு வந்து சென்ற ஆட்டோக்களிலும் கருப்பு கொடி பறந்ததை காண முடிந்தது.

இந்த போராட்டம் குறித்து தேவனாம்பட்டினம் மீனவர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-

இரு கிராம மீனவர்களுக்கிடையே நடந்த மோதலில் நடக்க கூடாத ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது. இதற்காக நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இதை காரணம் காட்டி சுருக்குவலையை பயன்படுத்த கூடாது என மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்து இருப்பதால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது.

சுருக்குவலையை பயன்படுத்தினால்தான் எங்களால் தொழில் செய்ய முடியும். தடை விதிக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் மீனவர்களும், இவர்களுடன் சேர்ந்து மீன்பிடி தொழில் செய்து வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர சமுதாயத்தினரின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் முடிந்துள்ளதால் அடுத்த 2 மாதங்களில் தான் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும். இந்த காலங்களில் மீன்பிடி தொழில் நடைபெறவில்லை என்றால் நீரோட்டம் மாற்றம் காரணமாக இங்குள்ள மீன்கள் வேறு மாநிலத்துக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சென்று விடும்.

குறித்த காலத்துக்கு பிறகு மீன்பிடிக்க சென்றால் மீன்கள் கிடைக்காது. அப்படி மீன்கள் கிடைக்காததால்தான் இங்கிருந்து முதல் முறையாக மீனவர்கள் கேரளாவுக்கு மீன்பிடிக்க சென்று ஒகி புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதை தமிழக அரசு நினைவில் கொள்ள வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.5 ஆயிரமும் கிடைக்கவில்லை. எனவே எங்களின் கஷ்டத்தை உணர்ந்து சுருக்குவலையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், அதுவரை எங்கள் போராட்டம் அமைதி வழியில் நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல் தாழங்குடா, சொத்திக்குப்பம், ராசாப்பேட்டை, நல்லவாடு கிராமங்களிலும் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மீனவர்கள் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூர் துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும் செய்திகள்