விருத்தாசலத்தில் ரெயில் மேற்கூரை மீது ஏறிய வாலிபரால் பரபரப்பு: ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் நின்ற ரெயில் மேற்கூரை மீது ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2018-06-19 22:30 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு திருச்சி- விருத்தாசலம் பயணிகள் ரெயில் வந்து நின்றது. அப்போது ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பயணிகள் ரெயில் பெட்டியின் ஒரு கண்ணாடியை உடைத்து விட்டு திடீரென ரெயில் மேற்கூரை மீது ஏறி மேல்பகுதியில் செல்லும் உயர்அழுத்த மின்கம்பியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதைபார்த்த ரெயில் நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அலறினர்.


இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரெயில் பெட்டியின் மேற்கூரை மீது ஏறி அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த உளுந்தாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் அழகேசன்(வயது 29) என்பதும், குடிபோதையில் ரெயில் மேற்கூரை மீது ஏறி மின்கம்பியை பிடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அழகேசன் மீது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரெயில் மீது ஏறிய வாலிபரை பத்திரமாக மீட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரை ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் வெகுவாக பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்