நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
திருமங்கலம் பாடிகுப்பம் காமராஜ் நகர் பகுதியில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
அம்பத்தூர்,
சென்னை திருமங்கலம் பாடிகுப்பம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 64). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி ஜெயா (60).
இவர் நேற்று காலை 6 மணியளவில், அதே பகுதியை சேர்ந்த 3 பெண்களுடன் பாடிகுப்பம் அண்ணாகுடியிருப்பு அருகில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 2 நபர்கள் மோட்டார்சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் திடீரென ஜெயாவின் அருகே சென்று, அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் கொண்ட 2 தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
இது குறித்து திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.