அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடு பதிவுகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய பயிற்சி

அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடு பதிவுகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய கருவூலகத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.;

Update: 2018-06-19 22:30 GMT
நாமக்கல்,

அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களது பணிப்பதிவேடு (சர்வீஸ் ரெக்கார்டு) தற்போது வரை புத்தக வடிவில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து பணிகளும் கணினி மயமாக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களது பணிப்பதிவேடு குறித்த விவரங்களை கணினி மயமாக்கும் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து பணிப்பதிவேட்டின் பதிவுகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய தனியார் மென்பொருள் நிறுவனத்தின் பயிற்றுனர்களால், அரசு துறைகளில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களான கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் கணக்கர் ஆகிய நிலையிலான அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நாமக்கல் செல்வம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமில் கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் கணக்கர் ஆகிய நிலைகளிலான அலுவலர்கள் மற்றும் கருவூலக துறையை சேர்ந்த அலுவலர்கள் என மொத்தம் 45 பேருக்கு 6 நாட்கள் முதன்மை பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெறும் கருவூலக துறையினை சேர்ந்த அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள மீதமுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த கண்காணிப்பாளர், உதவியாளர் மற்றும் கணக்கர் நிலையிலான அலுவலர்களுக்கு பணிப்பதிவேட்டின், பதிவுகளை வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பயிற்சியை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாமக்கல் கருவூலக அலுவலர் ரகோத்தமன், செல்வம் என்ஜினீயரிங் கல்லூரி செயலாளர் கவீத்ரா நந்தினிபாபு மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்