ரே‌ஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு மந்திரி ஜமீர்அகமதுகான் பேட்டி

‘‘ரே‌ஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்’’ என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார்.

Update: 2018-06-19 21:30 GMT

பெங்களூரு,

‘‘ரே‌ஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்’’ என்று மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார்.

கர்நாடக உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

மீண்டும் ஒரு வாய்ப்பு

‘‘ரே‌ஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி முன்பு நடைபெற்றது. இந்த பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. ஒரு குடும்பத்தில் 7 பேர் இருந்தால், அதில் 4 பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்து இருப்பார்கள். அதனால் இதையடுத்து ரே‌ஷன் அட்டையுடன் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்.

பழைய மைசூரு மண்டலத்தில் ரே‌ஷன் அட்டைகளுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ ராகி வழங்கப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ ராகி ரூ.19–க்கு கிடைக்கிறது. ஆனால் அதிகாரிகள் ராகிக்கு ஒரு கிலோவுக்கு ரூ.25.47 கொடுத்து கொள்முதல் செய்கிறார்கள். விவசாயிகளுக்கு அநீதி ஏற்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. சந்தையில் என்ன விலை இருக்கிறது அந்த விலைக்கு ராகியை கொள்முதல் செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

சித்தராமையா பயன்படுத்திய காரை...

மேலும் அன்ன பாக்ய திட்டத்தில் கூடுதலாக 2 கிலோ அரிசி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. ஹஜ் யாத்திரைக்கு இந்த ஆண்டு 5,200 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 29–ந் தேதி நான் டெல்லி செல்கிறேன். ஹஜ் யாத்திரைக்கு கூடுதலாக 2 ஆயிரம் பேருக்கு அனுமதி பெற்று வருவேன். நான் சிறப்பான முறையில் பணியாற்றுவேன்.

பெரிய காரில் பயணம் செய்தே எனக்கு பழக்கம். அதனால் ‘பார்ச்சுனர்‘ காரை வழங்குமாறு முதல்–மந்திரியிடம் கேட்டுள்ளேன். சித்தராமையா பயன்படுத்திய காரை வழங்கினால் மகிழ்ச்சி தான். குமாரசாமி மக்கள் தலைவர். அவர் எந்த காரில் சென்றாலும் அவரை மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். நான் அந்த அளவுக்கு வளரவில்லை. ஏதோ அதிர்ஷ்டவசமாக மந்திரி வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசு காரில் சென்றால் மக்கள் அடையாளம் காண்பார்கள்.’’

இவ்வாறு மந்திரி ஜமீர்அகமதுகான் கூறினார்.

எனக்கு மந்திரி பதவி வழங்கியதால்

ரோ‌ஷன் பெய்க், தன்வீர்சேட் ஆகியோர் 
அதிருப்தி அடைந்திருப்பது உண்மை

ஜமீர்அகமதுகான் சொல்கிறார்

மந்திரி ஜமீர்அகமதுகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

முன்னாள் மந்திரி தன்வீர்சேட், எங்களை அதாவது மந்திரி யு.டி.காதர் மற்றும் என்னை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கிடையாது என்று கூறி இருப்பது சரியல்ல. நான் தன்வீர்சேட்டின் சொந்த தொகுதிக்கு செல்கிறேன். அவரும் அங்கு வரட்டும். யாருக்கு மக்கள் கூட்டம் அதிகமாக கூடுகிறது என்பதை பார்க்கலாம். இதை அவருக்கு சவாலாக விடுக்கிறேன்.

கட்சி மேலிடம் ஆய்வு நடத்தி மந்திரி பதவியை எனக்கு வழங்கியுள்ளது. இதனால் மூத்த தலைவர்களான ரோ‌ஷன் பெய்க் மற்றும் தன்வீர்சேட்டுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருப்பது உண்மை தான். என்னிடம் உள்ள ஹஜ் மற்றும் வக்பு துறையை பறிக்கும்படி ரோ‌ஷன் பெய்க் கூறுவது சகஜமானது தான். இந்த துறையை என்னிடம் இருந்து பறித்தால், அதை யு.டி.காதருக்கு வழங்க வேண்டும். ரோ‌ஷன் பெய்க்குக்கு இதை வழங்க முடியாது. ஏனென்றால் அவர் மந்திரியாக இல்லை.

நான் மந்திரியான பிறகு மூத்த தலைவர்கள் ரகுமான்கான், சி.எம்.இப்ராகிம், என்.ஏ.ஹாரீஷ் ஆகியோரை சந்தித்து பேசினேன். ரோ‌ஷன் பெய்க்கை சந்திக்க அனுமதி கேட்டேன். அவர் எனக்கு அனுமதி வழங்கவில்லை. எனக்கும், குமாரசாமிக்கும் இடையே நல்லுறவு உள்ளது. நாங்கள் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்துவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்