ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு போராட்டம்: 22 வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் வெறிச்சோடியது
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்குவதாக தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு சட்டமன்ற மானிய கோரிக்கையில் இடம் பெறவில்லை.
எனவே இதனை உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பணியாற்றி வரும் 44 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 240 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 450 இளநிலை உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் 1,099 ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் நேற்று பணிக்கு செல்லாமல் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன. மேலும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக கிராமப்புறங்களில் குடிநீர் வினியோக பணிகள், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப்பணிகள், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டப்பணிகள், தனிநபர் கழிவறை திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்தனர்.