திண்டிவனத்தில் பரபரப்பு: கைத்துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது
திண்டிவனத்தில் கைத் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னையைச்சேர்ந்த ரவுடியை கொலை செய்யும் திட்டத்துடன் அவர்கள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
திண்டிவனம்,
2 ரவுடிகள் கைது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னசேகர் என்பவரது மகன் பாம்பு என்ற நாகராஜ்(30). பிரபல ரவுடியான இவர் பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அமைந்த கரையைச்சேர்ந்த பிரபல ரவுடி பல்லி என்ற ரோகனின் கூட்டாளியான சூளைமேட்டை சேர்ந்த குமரேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த வழக்கில் அவர் தலைமறைவாக இருந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி ரோகன் தனது எதிரியான நாகராஜை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த நாகராஜூம், ரோகனை கொல்ல சமயம் பார்த்துக் கொண்டு இருந்தார். அதனால் அவரது நடவடிக்கையை கண்காணித்து வந்தார்.
இதற்கிடையே ரோகனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா மூடூர் கிராமத்தை சேர்ந்த காசி மகன் பொன்ராஜின்(32) மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது நாகராஜூக்கு தெரியவந்தது.
கடந்த சில மாதங்களாக பொன்ராஜ் தனது மனைவியுடன் திண்டிவனத்தில் வசித்து வந்தார். இதனால் ரவுடி ரோகன் தனது கள்ளக்காதலியை பார்ப்பதற்காக திண்டிவனத்துக்கு அடிக்கடி வந்து சென்றார்.
இந்த விஷயத்தை நாகராஜூக்கு பொன்ராஜ் தெரிவித்தார். இதனால் ரோகனை கொலை செய்யும் சதிதிட்டத்துடன் நாகராஜ் ஸ்ரீபெரும்புதூரில் கைத்துப்பாக்கி மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி பையில் மறைத்து வைத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவில் திண்டிவனத்திற்கு வந்தார்.
அங்கு தனது கூட்டாளி பொன்ராஜ் உதவியுடன் ரோகனை கொலை செய்யும் திட்டத்துடன் திண்டிவனம் வ.ஊ.சி. திடல் அருகில் பதுங்கி நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பையை(பேக்) சோதனையிட்ட போது, அந்த பையினுள் அரிவாள், கத்தி, மிளகாய்பொடி பாக்கெட் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது.
அந்த ஆயுதங்களை பறி முதல் செய்த போலீசார், திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு 2 ரவுடிகளையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கைத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங் களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இது பற்றி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திண்டிவனத்துக்கு விரைந்து வந்து கைது செய்யப்பட்ட இரு ரவுடிகளிடமும் விசாரணை நடத்தினார்.
ரவுடிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களையும் பார்வையிட்டார். முன்கூட்டியே ரவுடிகள் கைது செய்யப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.