மதவாத அரசியலை தூக்கி எறிவோம், அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

மதவாத அரசியலை தூக்கி எறிவோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

Update: 2018-06-19 23:00 GMT

புதுச்சேரி,

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தியின் 48–வது பிறந்தநாள் நேற்று புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் தலைமையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு தங்கத்தேர் இழுத்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதன்பின் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 48 கிலோ எடையுடள்ள கேக் வெட்டப்பட்டது. முதல்–அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் ‘கேக்’ வழங்கினார். மேலும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், முல்லா வீதியில் உள் தர்காவில் தொழுகையும் நடத்தப்பட்டது.

ராகுல காந்தி பிறந்தநாள் விழாவில் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான நமச்சிவாயம் பேசியதாவது:–

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தவறான கொள்கை முடிவு எடுக்கும்போது அதனை நமது தலைவர் ராகுல்காந்தி எதிர்த்து போராடி வருகிறார். அவரை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி குழந்தை என ஏளனமாக பேசுவதை தூக்கி எறிந்துவிட்டு ஏழைகளுக்காக போராடி வருகிறார்.

அவரது செயல்பாடுகளின் மூலம் ஏழைகளுக்கு போராடும் தலைவர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். நாம் விரைவில் எம்.பி. தேர்தலை சந்திக்க உள்ளோம். மத்தியில் உள்ள மதவாத அரசை தூக்கி எறிய உள்ளோம்.

காங்கிரஸ் கட்சியை வேரறுப்போம் பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு செயல்படுகின்றனர். அவர்களது எண்ணம் மண்ணை கவ்வும் முடிவினை எடுக்கவேண்டியதுதான் 2019 தேர்தல். சோனியாகாந்தி, ராகுல்காந்தி அடையாளம் காட்டுபவர்களை வெற்றிபெற செய்யவேண்டியது நமது கடமை. புதுவை எம்.பி. தொகுதியை வென்றெடுப்பதன் மூலம் ராகுல்காந்தி பிரதமராவார்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.

மேலும் செய்திகள்