உறவினரை அடித்துக் கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
உறவினரை அடித்துக் கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த மகராஜகடை அருகே உள்ள சிவானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் வெடிப்பு ராஜேஷ் என்கிற ராஜேஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் ஊரில் அடிக்கடி சிலருடன் தகராறு செய்து வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி இரவு மது குடித்து விட்டு வந்து தகராறு செய்தார். இதை அவரது உறவினர் வேலாயுதம் (60) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், வேலாயுதத்தை கீழே தள்ளி செங்கல்லால் தலையில் தாக்கினார். இதில் வேலாயுதம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து அப்போதைய மகராஜகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நேற்று தீர்ப்பு கூறினார். கொலை குற்றத்திற்காக ராஜேசிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயக்குமார் ஆஜர் ஆகி வாதாடினார். ராஜேசை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.