சிவகங்கையில் மின்வாரிய ஊழியர்கள் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுவோருக்கு தினக்கூலியாக ரூ.380 தரப்படும் என்ற அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் சிவகங்கையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்திற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வீரய்யா உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் உமாநாத், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, மாநில செயலாளர் கோகுலவர்மன், சி.ஐ.டி.யு மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி, கணேசன், மோகனசுந்தரம், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.