திருப்பூர் மாவட்டத்தில் 20,800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளன

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக கருவூல கணக்குத்துறையின் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் தெரிவித்தார்.

Update: 2018-06-19 22:00 GMT

பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் என்ஜினீயரிங் கல்லூரியில் அரசின் சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக்கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூடத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். அரசின் கருவூல கணக்கு துறையின் முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் தலைமை தாங்கி ஆய்வுக்கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக நிதி மேலாண்மை தொடர்பான அரசுப்பணிகள் திறம்பட நடைபெற மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் என நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூல பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப்பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன.

இந்த திட்டத்தை சுமார் ரூ.288 கோடியே 91 லட்சம் செலவில் செயல்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. திட்டத்தினை செயல்படுத்தக்கூடிய அலுவலகங்களில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை நடைமுறை படுத்தும் போது மாநிலம் முழுவதும் உள்ள 29 ஆயிரம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடியாக இணையத்தின் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விபரம் உடனுக்குடன் கிடைப்பதுடன், தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்பட உள்ளது. சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரிப்பு எளிமையாக உள்ளது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் முழுவதும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை பணி வரலாறு முழுமையாக கணினி மயமாக்கப்பட உள்ளது.

அதன் மூலம் பணி மாற்றம் மற்றும் இதர வேலைகள் காலதாமதமின்றி உடனுக்குடன் மேற்கொள்ள முடியும். பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் திருப்பூர்மாவட்டத்தில் உள்ள 20,800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கருவூல அலுவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற 726 மருத்துவமனைகள் என்று இருந்ததை தற்போது 805 ஆக அதிகரிப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குதல் கடந்த 2017–2018–ம் நிதி ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.278 கோடியும், அரசு ஊழியர்களுக்கு ரூ.1,130 கோடியும் மாவட்ட கருவூல அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் வரவினமாக இந்த நிதி ஆண்டில் ரூ.2 ஆயிரத்து 350 கோடி அரசுக்கணக்கில் கருவூலங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசின் கருவூல கணக்குத்துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தெரிவித்தார்.

இந்த முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வன அலுவலர்(பொறுப்பு) மாரிமுத்து, கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் (மின் ஆளுகை) கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இயக்குனர் செல்வசேகர், மாவட்ட கருவூல அலுவலர் சுப்புலட்சுமி, இணை இயக்குனர் சோமசுந்தரம், ஜெய்ஸ்ரீராம் கல்வி குழுமங்களின் தலைவர் தங்கராஜ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்