குளித்தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குளித்தலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-19 22:00 GMT
குளித்தலை,

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பொதுமக்கள் இந்த வார்டின் முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான வக்கீல் சாகுல்அமீது தலைமையில் நேற்று மதியம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி அலுவலக கட்டிடம் முன்பு அமர்ந்திருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு வசிப்பவர்களின் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இப்பகுதியில் அமைந்துள்ள வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தனிநபர் ஒருவர் தனது இடத்தின் வழியாக செல்லும் இந்த வாய்க்காலின் பாதையை அடைத்துள்ளார். இதனால் வாய்க்காலி கழிவுநீர் தேங்கியது. தொடர்ந்து கழிவுநீர் தேங்கிக்கொண்டே வந்தால் வாய்க்கால் முற்றிலும் நிரம்பி தெருவில் கழிவுநீர் செல்லும் நிலை ஏற்படும். இதனால் பல வகைகளில் நாங்கள் பாதிக்கப்படுவோம். எனவே அடைக்கப்பட்ட வாய்க் காலை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினர்.

பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமால் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாய்க்காலை அடைத்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அறிந்த 10-வது வார்டு பொதுமக்கள் தங்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அடைக்கப்பட வாய்க்கால் திறந்துவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்