மரத்தடியில் கல்வி பயின்ற 5 மாணவிகள் மீது பாம்பின் திரவம் பட்டதால் மயக்கம்
அன்னவாசல் அருகே உள்ள குப்பத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகள் ஒரு மரத்தின் அடியில் படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.;
அன்னவாசல்,
அந்த மரத்தின் மேல் மூன்று பச்சை பாம்புகள் ஒன்றோடு ஒன்றாக பின்னி விளையாடி கொண்டிருந்தபோது மரத்தடியில் கல்வி பயின்ற 5-ம் வகுப்பு மாணவிகள் குப்பத்துபட்டியை சேர்ந்த விஜயக்குமார் மகள் மணிமேகலை (வயது10). ராமன் மகள் கங்காதேவி (10), சிங்கமுத்து மகள் பாண்டிமீனாள் (10) ராசு மகள் மகேஸ்வரி (10) முருகன் மகள் சிவஜோதி (10) ஆகிய மாணவிகள் மீது அந்த பாம்பில் இருந்து கசிந்த திரவம் விழுந்தது. இதனையடுத்து மாணவிகளின் உடம்பில் திரவம் பட்ட இடத்தில் அலர்ச்சி ஏற்பட்டு மயக்கம் வருவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மரத்தின் மீது பார்த்தபோது மூன்று பாம்புகள் இருந்தது தெரியவந்தது. மேலும் பொதுமக்கள் உதவியுடன் பாம்பை அடித்து எடுத்துக்கொண்டு மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அன்னவாசல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் மாணவிகளுக்கு உடனடி சிகிச்சை அளித்ததுடன், ரத்த பரி சோதனைகளும் செய்தனர்.
மேலும் மாணவிகளை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லையென தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.