கடற்கரையோர கிராம கிறிஸ்தவ ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் கலெக்டரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை

நெல்லை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கவேண்டும்.

Update: 2018-06-19 21:00 GMT

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடற்கரையோர கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்று இன்பதுரை எம்.எல்.ஏ. கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

கூம்பு வடிவ ஒலி பெருக்கி

ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பதுரை தலைமையில் கூடங்குளம் அருகே உள்ள கூத்தன்குழி பங்கு தந்தை ராஜன், தோமையார்புரம் பங்கு தந்தை வினிஸ்டர் மற்றும் ஊர் மக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோரத்தில் உள்ள மீனவ கிராமங்களில் புயல் காலங்களில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உள்ள கூம்பு வடிவ ஒலி பெருக்கி மூலம் தான் மீனவர்களுக்கு புயல், சுனாமி உள்ளிட்ட பேரிடர் எச்சரிக்கை செய்யப்படும். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதை காரணம் காட்டி தற்போது அந்த பகுதியில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிக்கு தடைவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்களுக்கு புயல், எச்சரிக்கை விடுக்கமுடியவில்லை எனவே மீனவ கிராமங்களுக்கு அதை பயன்படுத்த சிறப்பு அனுமதி தரவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இன்பதுரை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–

கடல் அரிப்பு

கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்திற்கு நிலம் கொடுத்த அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். கூடங்குளம் அணுமின்நிலைய திட்டத்தில் உவரி, குட்டம் பகுதியில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் 100–க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்படாமல் உள்ளது.

அந்த வீடுகளை உடனே கட்டிடிகொடுக்கவேண்டும். கூந்தங்குழியில் கடல் அரிப்பு ஏற்பட்டு கல்லறைகள் சேதம் அடைந்து உள்ளன எனவே அங்கு தடுப்பு சுவர் கட்டித்தரவேண்டும். தோமையார்புரம் தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் இது குறித்தும் கலெக்டரிடம் தெரிவித்து உள்ளேன்.

வெள்ளநீர் கால்வாய்த்திட்டம்

தாமிரபரணி, நம்பியாறு–கருமேணியாறு இணைப்பு திட்டமான வெள்ளநீர் கால்வாய்த்திட்டத்திற்கான 3–வது, 4–வது கட்டப்பணிக்கு தற்போது ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் டெண்டர் விடப்பட்டு ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. இந்த திட்டத்திற்கு உரிய பணம் இந்த திட்டத்திற்கே செலவிடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்