ரெயில்வே கிராசிங் பகுதியில் 2 லாரிகள் சிக்கியதால் வள்ளியூரில் போக்குவரத்து பாதிப்பு
வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் பகுதியில் 2 லாரிகள் சிக்கி கொண்டதால் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வள்ளியூர்,
வள்ளியூரில் ரெயில்வே கிராசிங் பகுதியில் 2 லாரிகள் சிக்கி கொண்டதால் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கிராசிங்வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் ரெயில்வே கிராசிங் உள்ளது. போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில் உள்ள இந்த ரெயில்வே கிராசிங்கை கடப்பதற்கு வாகனத்தில் செல்பவர்கள் சிலநேரங்களில் வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரெயில்வே கிராசிங்கில் சப்வே அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் வடக்கு பக்கம் புதிய கிராசிங் அமைத்து அதன் மூலம் போக்குவரத்து வாகனங்கள் சென்று கொண்டு இருக்கின்றன.
லாரிகளால் போக்குவரத்து பாதிப்புநேற்று காலையில் மதுரையில் இருந்து கூடன்குளத்தில் அமையவுள்ள பெட்ரோல் பங்க்கிற்கு டேங்கர் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த டேங்கர் லாரி வள்ளியூர் ரெயில்வே கிராசிங்கில் உள்ள தடுப்பு கம்பியில் செல்ல முடியாமல் சிக்கி கொண்டது. அதே நேரத்தில் ராதாபுரத்தில் இருந்து வள்ளியூர் நோக்கி வந்த பஞ்சு லோடு ஏற்றி வந்த மற்றொரு லாரி பழைய ரெயில்வே கிராசிங் வழியாக செல்ல முயன்றபோது பள்ளத்தில் சிக்கி கொண்டது.
இதனால் இரு பகுதியிலும் எந்த வாகனமும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதித்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வள்ளியூர் போலீசார் ரெயில்வே கிராசிங் தடுப்பு கம்பி மற்றும் பள்ளத்தில் சிக்கி கொண்ட லாரிகளை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.