வீடுகளுக்கு அனுமதி பெற்று விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’

வீடுகளுக்கு அனுமதி பெற்று விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’ வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

Update: 2018-06-19 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வீடுகளுக்கு என்று அனுமதி பெற்று விட்டு, வீடுகளை ஒன்றிணைத்து தங்கும் விடுதிகளாக மாற்றி நகராட்சிக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பை சிலர் ஏற்படுத்தி வருகின்றனர். அதுபோன்று விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 594 கட்டிடங்களை ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். இதனைதொடர்ந்து ஊட்டி நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ஓட்டல், தனியார் தங்கும் விடுதிகள், வீடு உள்ளிட்டவைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகிறார்கள்.

ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் வீடுகளுக்கு என தனித்தனி அனுமதி பெற்று, தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி உத்தரவின்படி, நகராட்சி திட்டமைப்பு அதிகாரி இளங்கோவன், கட்டிட ஆய்வாளர்கள் பழனிசாமி, மீனாட்சி மற்றும் பணியாளர்கள் அந்த தங்கும் விடுதிக்கு பூட்டு போட்டு நேற்று சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து எட்டின்ஸ் சாலை கெம்ஸ் பகுதியில் 3 தனியார் தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதிகளாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த 3 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அதன் முன்பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடம் என்று குறிப்பிடப்பட்ட நோட்டீசுகள் ஒட்டப்பட்டன.

இதுகுறித்து ஊட்டி நகர பொதுமக்கள் கூறும்போது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. தங்கும் விடுதிகள் இயங்க பல்வேறு அனுமதி பெற வேண்டும். ஆனால், சிலர் உரிய அனுமதி பெறாமலும், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை செலுத்தாமலும் உள்ளனர். எனவே வருவாய் மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தி அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்