வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி

வத்தலக்குண்டு அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-19 22:15 GMT

வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு–திண்டுக்கல் சாலையில் சுங்கச்சாவடி அருகே லட்சுமிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தனியார் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீரை விற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமிபுரத்திற்கென்று போடப்பட்ட 3 ஆழ்துளை கிணறுகளும் தண்ணீரின்றி, காட்சிப்பொருளாக உள்ளது. மேலும் மேல்நிலைத்தொட்டியும் பயனற்று கிடக்கிறது.

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஊருக்கென்று அமைக்கும் ஆழ்துளை கிணற்றை 600 முதல் 700 அடி ஆழம் மட்டுமே அமைப்பதாலும், பழைய மோட்டார்களை பொருத்துவதாலும் சில நாட்களிலேயே ஆழ்துளை கிணறுகள் பயனற்று போய் விடுவதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் பெண்கள், பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். மேலும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வத்தலக்குண்டு–திண்டுக்கல் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மறியல் செய்ய முயன்றவர்களை ஊர் பெரியவர்கள் தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்ட கிராம மக்கள், ஒரு வார காலத்திற்குள் அதிகாரிகள் குடிநீர் வழங்க நிரந்தர ஏற்பாடு செய்யாவிட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்