வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம்

பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க கோரி கோட்டூர் வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-19 22:00 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர், குன்னியூர், ரெங்கநாதபுரம், செருகளத்தூர் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் 2016-2017-ம் ஆண்டில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து பல முறை போராட்டம் நடத்திய பிறகு 25 சதவீதம் மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. மீதி உள்ள 75 சதவீத தொகை காப்பீடு நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதிக்குள் பெற்று தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் மீதி உள்ள பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே பயிர்க்காப்பீட்டு தொகையை பெற்று தராத வேளாண்மை துறை அதிகாரிகளை கண்டித்து கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வேளாண்மை அதிகாரிகள் ஒரு மாதத்துக்குள் பயிர்க்காப்பீட்டு தொகையை பெற்று தருகிறோம் என உறுதியளித்தும் இதுநாள் வரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. எனவே பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க கோரியும் பயிர்க்காப்பீட்டு தொகையை பெற்று தராத அதிகாரிகளை கண்டித்தும் கோட்டூர், குன்னியூர், ரெங்கநாதபுரம், செருகளத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோட்டூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், முன்னாள் எம்.பி. விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள், விவசாய சங்க பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, துணை இயக்குனர் சிவக்குமார், கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காப்பீட்டு நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு விரைவில் காப்பீட்டு தொகை பெற்று தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்