காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம் குறித்து ஆலோசித்து முடிவு - டி.கே.சிவக்குமார்

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினரை நியமிப்பது குறித்து ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2018-06-19 02:15 GMT
பெங்களூரு,

கர்நாடக நீர்ப்பாசனம் மற்றும் மருத்துவ கல்வித்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வருகின்றன. நமது மாநிலத்தின் சொத்துகளான அணைகளை பாதுகாக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கபினி அணையில் இருந்து 6.2 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் மேட்டூருக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கபினியில் நீர் திறந்து விடப்பட்டதால் நஞ்சன்கூடு அருகே விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்க நேரம் உள்ளது. அதை விடுத்துவிட்டு விவசாயிகள் தற்கொலைக்கு முயற்சி செய்வது சரியல்ல. இது போன்ற மிரட்டலுக்கு அரசு அடிபணியாது.

முதலில் அணைகளை பாதுகாக்க வேண்டியது தான் நமது நோக்கம். அதனால் அதிகாரிகளுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். இயற்கை பேரிடர் என்பது யாருடைய கையிலும் இல்லை. இத்தகைய நேரத்தில் கட்டிடங்கள் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினால் அதை நாங்கள் ஊக்குவிக்க மாட்டோம். தற்கொலை என்பது கோழைகளின் செயல். அதை கட்டுப்படுத்த ஒரு சட்டம் உள்ளது.

வருண பகவானின் கருணையால் நல்ல மழை பெய்கிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ். மற்றும் ஹாரங்கி ஆகிய 4 அணைகளில் தற்போது 114 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் விஷயத்தில் முதல்-மந்திரி குமாரசாமி அதிகளவில் ஆய்வு நடத்தி இருக்கிறார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி நிதின்கட்காரி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினரை நியமிப்பது குறித்து ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி குறித்து போராட்டம் நடத்தாமல் எடியூரப்பா ஏன் தாமதித்து வருகிறார் என்று தெரியவில்லை.

புதிய அரசு பணியாற்ற காலஅவகாசம் கொடுக்க வேண்டும். முதல்-மந்திரி பதவியில் அமர்ந்த 24 மணி நேரத்தில் சித்தராமையாவை சிறையில் அடைப்பேன் என்று எடியூரப்பா சொன்னார். அந்த பதவியில் அவர் 3 நாட்கள் இருந்தார். சித்தராமையாவை அவர் சிறையில் அடைத்தாரா?. அரசு செயல்படுவதற்கு என்று சில நெறிமுறைகள் இருக்கின்றன. வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி மேலிடம் மற்றும் முதல்-மந்திரி குமாரசாமி சம்பந்தப்பட்ட விஷயம். அதுபற்றி நான் கருத்து எதையும் தெரிவிக்கமாட்டேன். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்