அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது

நீதிமன்றம் குறிப்பிட்டதை விட அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என ஓசூர் அருகே தேவேகவுடா கூறினார்.

Update: 2018-06-18 23:29 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கனிமங்கலம் கிராமத்தில் புதிதாக கரகம்மா மற்றும் லகுமம்மா தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜை, கலச ஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சண்டி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த விழாவில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு விழா கமிட்டி சார்பில் மேள, தாள முழக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தேவேகவுடா கூறியதாவது:- தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. நீதிமன்றம் குறிப்பிட்டதை விட, அதிக அளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதற்கு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதே காரணமாகும். மேலும் 177 டி.எம்.சி. தண்ணீர் வழங்குவதை கர்நாடகம் தடை செய்யாது. காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை.

எங்கள் பகுதியில் (மண்டியா) 4 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை, நீர்மட்டம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் உரிமை, ஆணையத்திடம் உள்ளது. நீர் இருப்பு குறித்து ஆராய்ந்து, என்ன மாதிரியான பயிர்களை நடவு செய்ய வேண்டும் என்று அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்கள். அதன்படி விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, பயிர்களை நடவு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்தில், நடிகர் கமல்ஹாசனின் நிலைப்பாடு மீண்டும் பேச்சுவார்த்தை என்பதாக இருப்பினும், இது இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரம் என்பதால், அனைத்து தரப்பும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் விவசாய முறையை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. இது சம்பந்தமாக, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய நீர்வளத்துறை செயலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். தேவேகவுடாவின் வருகையையொட்டி, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்