ஓமலூர் அருகே ‘ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரிய வாய்க்காலை காணவில்லை’

ஓமலூர் அருகே ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரிய வாய்க்காலை காணவில்லை என்று விவசாயிகள் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-06-18 23:06 GMT
ஓமலூர்,

ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுகா தும்பிபாடி, பொட்டியபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு பெரும் நீர்ஆதாரமாக விளங்கி வந்தது பன்னிகரடு பகுதியில் இருந்து வரும் ஓடையாகும். இந்த ஓடையின் மூலம் முள்ளுசெட்டிபட்டி ஏரி, தும்பிபாடி ஏரி, சட்டூர் ஏரி, பொட்டியபுரம் ஏரி ஆகிய ஏரிகள் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பன்னிகரடு பகுதியில் இருந்து முள்ளுசெட்டிபட்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வரத்து நின்று போனது. இதன் காரணமாக இந்த பகுதியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முள்ளுசெட்டிபட்டி ஏரிக்கு நீர் வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என மேட்டூர் உதவி கலெக்டர், காடையாம்பட்டி தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற உதவி கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் 50 மீட்டர் தூரம் தூர்வாரி, ஆழப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த பணியும் திடீரென நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் விவசாயிகள் அந்த ஓடையின் வழியாக நேற்று சென்ற போது அங்கு ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டிருந்தது. அதில், முள்ளுசெட்டிபட்டி கிழக்கு பகுதி சுடுகாடு என்ற இடத்தில் பன்னிகரடு முதல் முள்ளுசெட்டிபட்டி பெத்தாம்பட்டி ஏரி வரை நீர்வரத்து வாய்க்கால் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்றதாகவும், பணி தொடங்கிய நாள் 22.06.2017 எனவும், பணி நிறைவுற்ற நாள் 16.11.2017 எனவும் எழுதப்பட்டிருந்தது. இதைப்பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி யடைந்தனர்.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் தூர்வாரிய வாய்க்காலை காணவில்லை என்று தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விவசாயி நஞ்சப்பன் மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

முள்ளுசெட்டிபட்டி ஏரிக்கு வரும் வாய்க்கால் 50 மீட்டர் மட்டுமே தூர்வாரப்பட்டது. ஆனால் பன்னிகரடு முதல் பெத்தாம்பட்டி வரை வாய்க்கால் ரூ.25 லட்சம் மதிப்பில் தூர்வாரியதாக கல்வெட்டு வைத்துள்ளனர். இதன் மூலம் பணியே செய்யாமல் மோசடி செய்து உள்ளது தெரிகிறது. ஓடை தொடங்கும் இடத்தில் இருந்து ஏரி வரை எந்த இடத்திலும் பணி நடைபெறவில்லை. அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, நடந்து செல்ல கூட இடம் இல்லாமல் உள்ளது. இதனால் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரிய வாய்க்காலை காணவில்லை என்று தீவட்டிப்பட்டி போலீசிலும், காடையாம்பட்டி தாசில்தார், ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஆகியோரிடமும் புகார் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்